இந்தியாவின் பிராட்பேண்ட் இணைய வேகம் சீனா மற்றும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி 76.9 சதவிகிதம் உயர்ந்து இச்சேவையில் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்பீடு டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் 2017’
‘ஸ்பீடு டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் 2017’ என்ற பெயரில் ஊக்லா நிறுவனம் இணைய வேகம் குறித்த (நவம்பர்) சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பிராட்பேண்ட் தரவிறக்க வேகம் 76.9 சதவிகிதம் உயர்ந்து 18.82 எம்.பி.பி.எஸ். ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிராட்பேண்ட் இணைய வேகத்தில் சீனா 42.3 சதவிகிதமும், அமெரிக்கா 37.3 சதவிகிதமும், ஜப்பான் 20.7 சதவிகிதமும், இந்தோனேசியா 18.9 சதவிகிதமும் உயர்வைச் சந்தித்துள்ளன. ஒட்டுமொத்த உலகின் பிராட்பேண்ட் இணைய வேகம் 30 சதவிகிதம் உயர்ந்து 20.28 எம்.பி.பி.எஸ். ஆக இருக்கிறது.
இணையத் தரவிறக்க வேகம்: முதலிடத்தில் பாகிஸ்தான்
மொபைல் இணையச் சேவையில், இந்தியாவின் மொபைல் இணையத் தரவிறக்க வேகம் 42.4 சதவிகிதம் உயர்ந்து 8.80 எம்.பி.பி.எஸ். ஆக உள்ளது. இதன்மூலம் வளர்ச்சி அடிப்படையில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 56.2 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் (13.08 எம்.பி.பி.எஸ்.) முதலிடத்தில் இருக்கிறது. இப்பட்டியலில் மொபைல் இணையப் பிரிவில் 27.6 சதவிகித வளர்ச்சியுடன் பிரேசில் மூன்றாமிடத்திலும், 23.5 சதவிகித வளர்ச்சியுடன் ஜப்பான் நான்காமிடத்திலும், 22 சதவிகித வளர்ச்சியுடன் அமெரிக்கா ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன.