ஆப்பிள் ஸ்மார்ட்போன்களைப் பயனர்கள் விரும்புவதற்குக் காரணம் அதன் பாதுகாப்பு அம்சம்தான். ஆண்ட்ராய்டு பயனர்கள் மத்தியில் பெரும் வருத்தம் தரும் விஷயமும் தகவல் பாதுகாப்புதான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் பயனர்களின் தகவல்கள் வெளியே கசிந்து விடுகிறது என்பது பயனர்களின் கருத்து. அதைச் சரி செய்வதற்காக அவ்வப்போது புதுமையான அப்டேட்களை செய்து புதிய வெர்ஷன்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
கூகுள் நிறுவனத்தின் புதிய அப்டேட்
அதன்படி சமீபத்தில் வெளியான 8.0 ஓரியோ வெர்ஷன் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும். தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று பயனர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்குத் தீர்வு காணும் விதமாக புதிய அப்டேட் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் பயனர்களின் தகவலைப் பாதுகாக்க புதிய வசதிகள் இணைக்கப்படும் என்றும், முன்னர் இருந்த பாதுகாப்பு அமைப்பை மேலும் மேம்படுத்தி இந்த வெர்ஷனில் இணைக்க உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் மொபைலை லாக் செய்த பின்னர், அனைத்து அப்ளிகேஷன்களும் நிறுத்தம் செய்யப்படும் என்றும், இதனால் தகவல்கள் பிறரால் கண்காணிக்கப்படுவது தடை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இணையத்தில் பயனர்கள் தங்கள் தகவல்களை பதிவிடும்போது அதை பிறர் ஹேக் செய்து கைப்பற்றாமல் இருக்கும் வசதியைச் சேர்க்க உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.